"டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அரங்கில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனைக்கு முரளிதரன் தகுதியானவர் இல்லை,'' என, ஆஸ்திரேலியாவின் முன்னாள் அம்பயர் ரோஸ் எமர்சன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியின் சுழல் மன்னன் முத்தையா முரளிதரன். உலக அரங்கில் டெஸ்ட் (132 போட்டி, 792 விக்.,) மற்றும் ஒரு நாள் (337 போட்டி, 515 விக்.,) போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இவர் வரும் 18 ம் தேதி காலியில் நடக்க உள்ள இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளார்.
எமர்சன் பாய்ச்சல்:
இந்நிலையில் முரளி சாதனை வீரர் இல்லை என, ஆஸ்திரேலியாவின் முன்னாள் அம்பயர் ரோஸ் எமர்சன் தெரிவித்துள்ளார். இவர் கடந்த 1996 ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகள் பிரிஸ்பேனில் மோதிய ஒரு நாள் போட்டியில், அம்யராக செயல்பட்டார். அப்போது முரளிதரன் அளவுக்கு அதிகமாக முழங்கையை வளைத்து பந்து வீசுவதாக குற்றம் சாட்டினார். இப்போட்டியில் முரளிதரனுக்கு 7 "நோபால்' வழங்கினார். இப்போட்டிக்குப் பின் முரளிதரன் அத்தொடரிலிருந்து நீக்கப்பட்டார்.
முரளிதரன் மீது தான் கூறிய குற்றச்சாட்டில் எந்த மாற்றமும் இல்லை என எமர்சன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது: கடந்த 15 ஆண்டுகளாக எனது நிலையில் மாற்றமில்லை.
சாதனை வீரருக்கான தகுதி முரளிதரனுக்கு இல்லை. ஆஸ்திரேலியாவின் வார்னுடன், முரளிதரனை ஓப்பிட வேண்டாம். வார்னின் பந்து வீச்சை யாரும் குறை கூற முடியாது. நிர்ணயிக்கப்பட்ட அளவில் தான் அவர் பந்து வீசுகிறார். முரளிதரன் சிறந்த பவுலர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஐ.சி.சி.,யின் வரைமுறைக்கு உட்பட்டு அவர் பந்து வீசுவது இல்லை. இவ்வாறு எமர்சன் தெரிவித்தார்.
கடந்த 1992 ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்தார் முரளிதரன். 1995 ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது, இவர் பந்தை எறிவதாக அம்பயர் டேரல் ஹேர் குற்றம் சாட்டினார். அதற்குப் பின் 1999 ம் ஆண்டு இதே குற்றச்சாட்டை அம்பயர் எமர்சன் தெரிவித்தார். கடந்த 2004 ம் ஆண்டும் இதே பிரச்னையில் மீண்டும் சிக்கினார் முரளிதரன். ஆனால் பல முறை நடத்தப்பட்ட சோதனைகளின் முடிவில், இவரது பந்து வீச்சில் குற்றம் இல்லை என நிரூபிக்கப்பட்டது.
1 comments:
இவனையெல்லாம் திருத்த முடியாது. ஒரு பைத்திய வைத்தியசாலையில் சேருங்க.
Post a Comment