உலக கோப்பை கால்பந்து தொடரில், ஜெர்மனி அணி மூன்றாவது இடம் பெற்று, வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. நேற்று நடந்த பரபரப்பான போட்டியில் அபாரமாக ஆடிய ஜெர்மனி அணி, உருகுவேயை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் பைனலுக்கு ஸ்பெயின்,நெதர்லாந்து அணிகள் தகுதி பெற்றன. நேற்று போர்ட் எலிசபெத்தில் நடந்த மூன்றாவது இடத்துக்கான போட்டியில் முன்னாள் சாம்பியன்களான ஜெர்மனி, உருகுவே அணிகள் மோதின.
குளோஸ் இல்லை:
ஜெர்மனி அணியில் முதுகு வலியால் அவதிப்பட்ட குளோஸ், பிலிப் லாம், கோல்கீப்பர் மானுவேல் நூயர் ஆகிய முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால், பிரேசிலின் ரொனால்டோவின் அதிக கோல்(15) அடித்த சாதனையை குளோஸ்(14) முறியடிக்க இயலவில்லை.
முல்லர் கோல்:
துவக்கத்தில் ஜெர்மனி அசத்தலாக ஆடியது. ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் இந்த அணியின் ஓசில் அடித்த பந்து இலக்கு தவறி பறந்தது. பின் தாமஸ் முல்லர் கலக்கினார். ஆட்டத்தின் 19வது நிமிடத்தில் கேப்டன் ஸ்கிவன்ஸ்டீகர் அடித்த பந்தை உருகுவே கோல்கீப்பர் முஸ்லேரா பிடித்து வெளியே தள்ளினார். அதனை சாமர்த்தியமாக அப்படியே கோல்போஸ்டுக்குள் அடித்தார் முல்லர். இது இத்தொடரில் இவர் அடிக்கும் 5வது கோல். இதன் மூலம் ஜெர்மனி 1-0 என முன்னிலை பெற்றது.
உருகுவே பதிலடி:
இதற்கு பதிலடி கொடுக்கும் வேகத்தில் உருகுவே வீரர்கள் அதிரடியாக ஆடினர். ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் மத்திய களத்தில் வைத்து ஸ்கிவன்ஸ்டீகரிடம் இருந்து பந்தை தட்டிப் பறித்தார் உருகுவே வீரர் சாரெஸ். இதனை, சக வீரர் கவானிக்கு அருமையாக "பாஸ்' செய்தார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கவானி, மின்னல் வேகத்தில் கோல் அடிக்க, உருகுவே ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். முதல் பாதி முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடிக்க, போட்டி 1-1 என சமநிலையில் இருந்தது.
ஜெர்மனி வெண்கலம்:
இரண்டாவது பாதியில் கொட்டும் மழையிலும், இரு அணி வீரர்களும் விட்டுக் கொடுக்காமல் போராடினர். ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் உருகுவே அணியின் நட்சத்திர வீரரான போர்லான் ஒரு சூப்பர் கோல் அடித்து அசத்தினார். பின் 56வது நிமிடத்தில் ஜெர்மனியின் இயான்சன் தலையால் முட்டி ஒரு அற்புத கோல் அடிக்க, போட்டி 2-2 என்ற கணக்கில் மீண்டும் சமநிலை எட்டியது. அடுத்து 82வது நிமிடத்தில் "கார்னர்' வாய்ப்பில் ஓசில் பந்தை அடித்தார். இதனை உருகுவே தற்காப்பு பகுதி வீரர்கள் முறையாக தடுக்க தவறினர். இந்த நேரத்தில் பந்தை அப்படியே தலையால் முட்டி ஜெர்மனியின் கதிரா ஒரு கோல் அடித்து அசத்தினார். கடைசி கட்டத்தில் உருகுவே வீரர் போர்லான் அடித்த பந்து "பாரில்' பட்டுச் செல்ல வெற்றி கனவு தகர்ந்தது. இறுதியில் ஜெர்மனி அணி 3-2 என்ற கோல் கணக்கில் வென்று, மூன்றாவது இடத்துக்கான வெண்கலப் பதக்கத்தை பெற்றது.
ஆட்ட நாயகனாக ஜெர்மனி வீரர் தாமஸ் முல்லர் தேர்வு செய்யப்பட்டார்.
பால் "ஆக்டோபசுக்கு' மீண்டும் வெற்றி. இது கணித்தது போலவே ஜெர்மனி அணி மூன்றாவது இடம் பிடித்துள்ளது. இத்தொடரில் ஜெர்மனி அணியை பொறுத்தவரை "ஆக்டோபஸ்' கணிப்பு நூறு சதவீதம் சரியாக அமைந்துள்ளது. இனி "ஆக்டோபஸ்' கணிப்பின்படி ஸ்பெயின் அணி கோப்பை கைப்பற்றுமா என்பதை பார்ப்போம்.
0 comments:
Post a Comment